கார்த்திகை தீபம் என்றாலே திருநெல்வேலி மாவட்ட மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பனை ஓலைக் கொழுக்கட்டை. இது வெறும் இனிப்புப் பதார்த்தமல்ல; ஒளியும், இயற்கையும், ஆன்மிகமும் ஒரே ஓலையில் மடங்கி நிற்கும் தமிழர் வாழ்வியலின் அடையாளம். பனை மரங்களை வாழ்வின் ஒரு அங்கமாக கொண்ட திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தான் இந்த உணவு மரபு உருவானது.
தீப ஒளி இருளை அகற்றுவது போல, கருப்பட்டியின் இனிப்பு வாழ்க்கையின் கசப்புகளை கரைக்கும் என்ற நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது. அதனால் தான், இந்த கொழுக்கட்டையை வீட்டில் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாக படைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கொழுக்கட்டை மிகவும் சுவையாகவும், நறுமணமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கிலோ
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கிலோ
சுக்குப் பொடி – சிறிதளவு
தேங்காய் – 1
பனை ஓலை
எப்படி செய்வது?
* பச்சரிசியை நன்கு கழுவி 2–3 மணி நேரம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்துங்கள். உலர்ந்தபின் கடையில் கொடுத்து நன்றாக மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
* இரு முனைகளையும் வெட்டி அகற்றி, தேவையில்லாத ஓலைகளிலிருந்து நார் இழித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை பூ போல நன்றாக துருவி தயார் செய்து வைக்கவும்.
* பனை வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இளம்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள் (கருப்பட்டியில் தூசி இருக்கும் என்பதால் இதை தவிர்க்கக் கூடாது).
* ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு, அதில் துருவிய தேங்காய், சுக்குப் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இதனுடன் வடிகட்டிய கருப்பட்டி பாகை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல், மென்மையான பக்குவமாக பிசைய வேண்டும். இதில் கூடுதலாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
* மற்றொரு பெரிய, கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, பனை ஓலை வெட்டியதில் மீதமுள்ள தேவையில்லாத ஓலைகளை அதில் போடவும்.
* வெட்டி வைத்துள்ள பனை ஓலையின் மடிப்புப் பகுதியில் நடுவே ஒரு சிறு அளவு மாவை வைக்கவும்.
* அதன் மேல் இன்னொரு ஓலையை வைத்து மூடி, மாவு வெளியே வராதபடி, முன்பே எடுத்துப் வைத்த நாரால் இறுக்கமாக கட்டி விடவும்.
* இதே முறையில் அனைத்தையும் தயாரித்து, பாத்திரத்தில் அடுக்கி வைத்து மூடி போடவும். 25 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும்.
* இப்போது நறுமணமும், சுவையும் நிறைந்த பாரம்பரிய பனை ஓலைக் கொழுக்கட்டை தயார்.
Read more: இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்!



