இன்றைய காலக்கட்டத்தில் நிலையான மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது என்பது தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்வதில் தான் உள்ளது. நிதி ஆலோசகர்கள் பொதுவாக மொத்தமாகப் பணம் போடுவதைவிட, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் முதலீடு செய்யவே அதிகம் பரிந்துரைக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதால் தான்.
SIP-யின் சிறப்பு என்ன..?
SIP மூலம் முதலீடு செய்யும்போது, மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் மாதாமாதம் வாங்குகிறீர்கள். சந்தையில் விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்டுகளையும், விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்டுகளையும் வாங்குவதால், நீண்ட கால முடிவில், நீங்கள் யூனிட்டுகளை வாங்கிய சராசரி விலை குறைவாக இருக்கும். இது உங்கள் மொத்த வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
ரூ.1 கோடியை 10 ஆண்டுகளில் ஈட்டுவது எப்படி..?
நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை, நீங்கள் பெறும் வருடாந்திர வட்டி விகிதமே தீர்மானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட (உதாரணமாக 10 ஆண்டுகள்) காலப்பகுதியில் ரூ.1 கோடியை அடைய நீங்கள் மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
10% வட்டி விகிதம்: நீங்கள் மாதந்தோறும் ரூ.48,817 SIP செய்ய வேண்டும். 10 வருடங்களில் உங்கள் மொத்த முதலீடு ரூ.58.58 லட்சம் ஆகும்.
11% வட்டி விகிதம்: வருமானம் 1% கூடினால், உங்கள் மாதாந்திர SIP தொகை ரூ.46,083 ஆக குறையும். உங்கள் மொத்த முதலீட்டுச் சுமை ரூ.55.30 லட்சம் ஆகும்.
12% வட்டி விகிதம்: வருமானம் 12% ஆக இருந்தால், மாத SIP தொகை ரூ.43,471 ஆக குறையும். மொத்த முதலீடு வெறும் ரூ.52.17 லட்சம் மட்டுமே.
இந்தக் கணக்குகள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், நீங்கள் தேர்வு செய்யும் மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் வருமான விகிதம் அதிகமாக இருந்தால், நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய மாதாந்திரத் தொகை கணிசமாகக் குறையும். அதாவது, சிறந்த ஃபண்டை தேர்வு செய்வதன் மூலம், உங்கள் முதலீட்டுச் சுமையைக் குறைத்து, இலக்கை எளிதில் அடைய முடியும்.



