ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் ராஜினாமா கடிதத்தில் “சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்திய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது அரசியல் வட்டாரங்களில் பல ஊகங்களைத் தூண்டியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளுக்குப் பிறகு ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் உட்பட, மாநிலங்களவைத் தலைவராக முக்கியமான அமர்வுகளுக்கு அவர் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
74 வயதான ஜெக்தீப் தன்கர் ஆகஸ்ட் 2022 இல் பதவியேற்றார், 2027 இல் அவரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய இருந்தது.. எனினும் அவரின் பதவிக்காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் அடிக்கடி வார்த்தை மோதல்கள் நடந்துள்ளது.. மேலும் அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்தார்.
ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா : தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
ஜெக்தீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று மார்ச் மாதம் சில நாட்கள் அனுமதிக்கப்பட்டார். சில நிகழ்வுகளில் அவர் பலவீனமாகத் தோன்றினாலும், அவர் நாடாளுமன்றத்தில் சுறுசுறுப்பாக இருந்தார்.
தனது பதவிக் காலத்தில், ஜெக்தீப் தன்கர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டார்.. சுதந்திர இந்தியாவில் பதவியில் இருக்கும் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இருப்பினும், அந்த தீர்மானத்தை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்தார்..
ஜெக்தீப் தன்ரின் பதவிக்கு அடுத்து யாரை நியமிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. காலியிடம் ஏற்பட்டால் துணைத் தலைவரின் ஒட்டுமொத்த கடமைகளை யார் செய்ய வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை.
இருப்பினும், மாநிலங்களவைத் தலைவரின் பங்கு தொடர்பான ஒரு விதி அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.. குடியரசு துணைத் தலைவர் பதவி காலியிடத்தின் போது”, துணைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த மாநிலங்களவை உறுப்பினராலும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
அரசியலமைப்பின் பிரிவு 66 இன் படி, துணை ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் கொண்ட ஒரு தேர்தல் குழுவால், ஒற்றை வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவில் பெரும்பான்மையைக் கொண்ட ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), வரும் நாட்களில் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 முதல் இந்தப் பதவியை வகித்து வரும் ஜனதா தளம் (ஐக்கிய) எம்.பி.யான ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது., மேலும் அவர் அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்றவர் என்று அறியப்படுகிறது.
தகுதி பெற, ஒரு வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும், மேலும் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். “ஒரு நபர் இந்திய அரசு அல்லது ஒரு மாநில அரசு அல்லது எந்தவொரு துணை உள்ளூர் அதிகாரசபையின் கீழும் ஏதேனும் இலாபகரமான பதவியை வகித்தாலும் அவர் தகுதியற்றவர்” என்று அரசியலமைப்பு கூறுகிறது.
ஜெக்தீப் தன்கரை தொடர்ந்து அவரின் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து பேசிய பாஜக தலைவர் ஒருவர் “நாங்கள் இன்னும் இதுகுறித்து விவாதித்து வருகிறோம். ஆனால் கட்சி ஒரு உறுதியான தேர்வாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து பேசிய போது, “துணைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரின் திடீர் ராஜினாமா விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது… சந்தேகத்திற்கு இடமின்றி ஜெக்தீப் தன்கர் தனது உடல்நலத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் அவரது எதிர்பாராத ராஜினாமாவில் கண்ணுக்குத் தெரியாததை விட அதிகமான விஷயங்கள் உள்ளன.” என்று கூறினார்.
தங்கள் பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே ராஜினாமா செய்த முதல் குடியரசு தலைவர் ஜெக்தீப் தன்கர் இல்லை.. வி.வி. கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரும் இதே போல் ராஜினாமா செய்தனர்.. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கிரி 1969 இல் ராஜினாமா செய்தார். 2007 இல் குடியரசுத் தலைவர் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் ஷெகாவத் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..