அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முடக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் 30 லட்சம் இணைப்புகள் இருந்ததாகவும், தற்போது திமுக குடும்பத்தினர் கேபிள் டிவியை நடத்துவதால், இணைப்புகள் 14 லட்சமாக குறைந்துவிட்டதாகவும் கூறினார். இதனால், ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு செட்டாப் பாக்ஸ் வாடகைக்கு எடுக்கப்படுவதாகவும், இதில் ஊழல் நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது. மாநிலத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அதேபோல், கொங்கு மண்டலத்தில் முதியவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. தனது குடும்பம் செழிக்க வேண்டும் என்பதில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “அமெரிக்கா வரிவிதிப்பு காரணமாக திருப்பூர் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து, இந்த பிரச்சனையை சரிசெய்யவோ அல்லது மத்திய அரசுடன் பேசி தீர்வு காணவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசு வெறும் விளம்பரங்களிலும், பெயருக்கு மட்டும் திட்டங்களை அறிவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது” என்றும் விமர்சித்தார்.
Read More : இந்த தோஷம் மட்டும் உங்களுக்கு இருந்தால் பல பிரச்சனைகள் வரும்..!! எப்படி அறிவது..? தீர்வு என்ன..?



