கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில், கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெசோ என்ற தனியார் காப்பகத்தில், 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த 61 வயது சாம் கணேஷ் என்பவரால் நடத்தப்பட்டு வரும் இந்த காப்பக வளாகத்திற்குள்ளேயே, ஃபிரிகேஜ் முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியின் 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி, காப்பகத்தின் உரிமையாளர் சாம் கணேஷால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்ல, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த துன்புறுத்தல் நடந்துள்ளது தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, போலீசார் காப்பக உரிமையாளர் சாம் கணேஷைக் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க, சாம் கணேஷுடன் இணைந்து பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஓசூரைச் சேர்ந்த நாதா முரளி, செல்வராஜ், மற்றும் சாம் கணேஷின் மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read More : தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நரபலி..? பீதியில் உறைந்து போன மக்கள்..!! கோவை, நாமக்கல்லில் பெரும் பரபரப்பு..!!



