தெலங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் மற்றும் சொந்த மகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலையின் பின்னணி என்ன..?
ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், அவரது இரண்டாவது மனைவி கவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் குமாரசாமிக்குத் தெரியவந்தபோது, அவர் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி, மகள் வர்ஷினி வீட்டில் இல்லாத நேரத்தில், ராஜ்குமாரை வரவழைத்து குமாரசாமியின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்துள்ளனர். பின்னர், உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடி, உடலை அடக்கம் செய்தனர். தந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மகள் வர்ஷினி, தனது தாயிடம் ராஜ்குமாரின் வருகை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என எண்ணிய கவிதா, மகளையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, தூங்கிக் கொண்டிருந்த வர்ஷினியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கவிதா மற்றும் ராஜ்குமார், உடலை சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசினர். பின்னர், மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்து நாடகமாடினர்.
இந்த நாடகத்துக்கு ஒரு படி மேலே சென்று, ஆகஸ்ட் 25ஆம் தேதி, ராஜ்குமார் வர்ஷினியின் சடலத்தை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து, யாரோ சடங்கு செய்து கொன்றதுபோல மஞ்சள், குங்குமம் தூவி, ஆதார் அட்டையையும் அருகே போட்டுவிட்டு சென்றார். ஆதார் அட்டையின் அடிப்படையில் வர்ஷினியின் தாய் கவிதாவை போலீசார் அழைத்தனர்.
முதலில், மகளை யாரோ கொலை செய்துவிட்டதாகக் கதறி நடித்த கவிதா, போலீசாரின் தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்காகக் கணவர் மற்றும் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, கவிதா மற்றும் ராஜ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : உங்கள் பணத்தை இனி ஈசியா இரட்டிப்பாக்கலாம்..!! வட்டியே இவ்வளவு கிடைக்குமா..? மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!