உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் அகிர்வார் என்பவருக்கும், தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்கு இவர்களது இல்லற வாழ்க்கை சீராக சென்ற நிலையில், அதன் பிறகு கணவன் முகேஷ் அகிர்வாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பல நேரங்களில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் முகேஷ். இது குறித்து மனைவி தீஜா கேள்வி எழுப்பிய போதெல்லாம், அவர் மனைவியைத் திட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல, கடந்த முன்தினம் இரவு வெளியே சென்ற முகேஷ், நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தனது மனைவியை வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
இதற்கு மனைவி தீஜா மறுப்பு தெரிவித்ததால், முகேஷ் ஆத்திரம் அடைந்துள்ளார். கோபத்தின் உச்சத்தில், அவர் தனது மனைவி தீஜாவைத் தூக்கிச் சென்று, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். தீஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முகேஷ் அகிர்வாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் பாலியல் வற்புறுத்தல் காரணமாக மனைவி மீது கணவன் நடத்திய இந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



