இந்தியாவில் பெண்களைத் துன்புறுத்தும் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ராணுவ வீரர் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசாம் அலி. ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரவீன் பேகம். திருமணம் ஆனது முதல் ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு காரும் வரதட்சணையாக கேட்டு தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளார். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு மனைவி ரவீன் பேகத்தை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் கதறி அழுத போதிலும் அவர் தொடர்ந்து தாக்கினார். அக்கம் பக்கத்தினர் வீட்டருகே கூடியதும் பெண்ணை தர தரவென வீட்டின் உள்ளே இழுத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பலத்த காயங்களுடன் மனைவி ரவீன் பேகம், உதம்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரதட்சணை தொடர்பாக தொடர்ந்து உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக, அவரது குடும்பத்தினர் ரேஹம்பல் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அசாம் அலியை கைது செய்துள்ளனர். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். நாளுக்கு நாள் வரதட்சனை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Flash: தமிழ்நாட்டில் உதயமானது மாநில கல்வி கொள்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்..!!