உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கன்ச் பகுதியைச் சேர்ந்த அனில் என்பவர் தனது தாய்மாமா மகள் அனிதாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அனில் தனது மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சினுடன் ஹரிதுவா கிராமம் அருகே உள்ள ஓம் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அனில் அங்கு டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
சம்பவம் நடந்த அன்று காலை, அனிலும் அவரது தம்பியும் வழக்கம் போல வேலைக்குச் சென்றனர். ஆனால், மாலையில் வீடு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அனிதா படுக்கை அருகே தரையில் சடலமாக கிடந்தார். அறை முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்ததோடு, அருகில் ரத்தக் கறை படிந்த ஒரு அரிவாளும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அனிதாவின் சகோதரர் சந்திரபால் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
அனிதாவின் கணவர் அனில், தம்பி சச்சின் மற்றும் மற்றொரு உறவினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அனிதாவின் கணவர் அனில்தான் முக்கிய சந்தேக நபர் என்பது தெரியவந்துள்ளது. அனில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதற்கு அனிதா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கள்ளத்தொடர்பினால் ஏற்பட்ட மனக்கசப்பே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களைக் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



