கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கும், சங்கப்பா (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாரம்மா கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சங்கப்பா தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் மாரம்மாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மனைவியின் மறுப்பால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சங்கப்பா, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மாரம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரம்மா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா, அங்கிருந்து நேராக அருகிலிருந்த காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கப்பா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.