கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் சாலைப் பகுதியில், கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓடிவந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளானவர் துர்க்காதேவி என்பதும், அவரை ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் உளியால் குத்திக் கொல்ல முயன்றது அவரது கணவர் மாதவன் என்பதும் அம்பலமானது.
மாதவன் – துர்க்காதேவி தம்பதியினருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துர்க்காதேவிக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரமே அனைத்து விபரீதங்களுக்கும் தொடக்கமானது. கடந்த 2020-ஆம் ஆண்டு துர்க்காதேவியின் காதலன் ஜெயசீலனை மாதவன் உளியால் குத்திக் கொலை செய்து சிறை சென்றார். கணவர் சிறையில் இருந்த நேரத்தில், தனது பிஞ்சு குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு துர்க்காதேவி 3-வது ஒரு நபருடன் ஓட்டம் பிடித்தார்.
சிறையிலிருந்து வந்த மாதவன், மனைவியின் துரோகத்தால் மனவேதனையடைந்து விஜி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், தனது முதல் மனைவி செய்த காரியத்தால் தன் 2 பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் பாட்டியிடம் வளர்வதைக் கண்டு மாதவன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
திருவாரூரில் தனது 3-வது காதலனுடன் வசித்து வந்த துர்க்காதேவியை சமாதானம் பேசுவது போல தொடர்புகொண்ட மாதவன், “குழந்தைகள் உன்னை பார்க்க துடிக்கிறார்கள்” என்று நைசாகப் பேசி அழைத்து வந்துள்ளார். விசலூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்துத் தான் மறைத்து வைத்திருந்த உளியால் மனைவியின் தொண்டையை குறிவைத்துக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த துர்க்காதேவி தப்பியோடி உயிர் பிழைத்தார்.
தலைமறைவாக முயன்ற மாதவனை போலீசார் விரைந்து கைது செய்தனர். காதல், துரோகம், சிறைவாசம் என ஒரு சினிமா திரைக்கதை போலவே நகர்ந்த இந்தச் சம்பவத்தில், தாய் – தந்தை இருவரின் பாசமும் இன்றி அனாதைகளாக தவிக்கும் அந்த 2 பெண் குழந்தைகளின் எதிர்காலம் தான் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
Read More : மாதம் ரூ.1,25,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



