சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (வயது 21). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
புதுமணத் தம்பதிகளான பாண்டி மற்றும் ரூபிகா இருவரும், தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடுவதற்காக கடந்த 19-ஆம் தேதி ரூபிகாவின் சொந்த ஊரான களத்துப்பட்டி கிராமத்திற்கு வந்திருந்தனர். இதையடுத்து, உறவினர்களுடன் சேர்ந்து அவர்கள் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 22) பாண்டி மீண்டும் வேலைக்குச் செல்லப் போவதாக ரூபிகாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தலை தீபாவளிக்காக வந்தவர் ஏன் இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ரூபிகா கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்டைக்கு பிறகு பாண்டி நேற்றே பணிக்குச் சென்றுவிட்டார்.
தான் வற்புறுத்தியும் கேட்காமல் கணவர் வேலைக்குச் சென்றதால் ரூபிகா மனவருத்தம் அடைந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து புழுதிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிவகங்கை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தலை தீபாவளி கொண்டாடிய சில நாட்களிலேயே புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தமிழ்நாடு காவல்துறையில் 3,640 + காலியிடங்கள்..!! வெளியானது ஹால் டிக்கெட்..!! டவுன்லோடு செய்வது எப்படி..?



