உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இறந்தவரின் மனைவியும், மருமகனும் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத்தில் வேலை செய்து வந்த அந்த நபர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தச் சூழலில், அவரது மனைவிக்கு மருமகனுடன் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்த கணவர், கடந்த 2024 நவம்பர் 2ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மது அருந்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட மனைவி முடிவு செய்துள்ளார்.
அதன்படி, அவரது மனைவியும் மருமகனும் சேர்ந்து அவருக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் குடிக்க கொடுத்துள்ளனர். அதை குடித்ததும் மயங்கிய அவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை வீட்டின் பின்புறத்தில் ஒரு குழியைத் தோண்டி புதைத்துள்ளனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரின் தாய், தனது மகன் நீண்ட நாட்களாக காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், புதைக்கப்பட்ட இடத்தில் மண் அடிக்கடி தாழ்ந்து போவதைக் கண்ட போலீசார், சந்தேகமடைந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர்.
அப்போது, அங்கு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், இறந்தது அந்தப் பெண்ணின் கணவர் என்பது தெரியவந்தது. புதைக்கப்பட்ட இடத்தில் மண் தாழ்ந்து போகாமல் இருக்க, மீண்டும் மீண்டும் மண்ணை நிரப்பி வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது மனைவியும் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்தவரின் எலும்புகள் மற்றும் முடிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : நாள்பட்ட மூட்டு வலிக்கு இந்த தெரபியை யூஸ் பண்ணி பாருங்க..!! எலும்பியல் நிபுணர் கொடுத்த டிப்ஸ்..!!