முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சசிகலா தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழலுக்குத் தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.
ஓபிஎஸ்-ஸின் கட்சி தாவல் குறித்துப் பேசிய சசிகலா, “தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக தான் திமுகவை நாங்கள் பார்க்கிறோம். அப்படியிருக்கையில், ஒரு தாய் கழகம் போல நினைத்துக் கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது மிகப்பெரிய வரலாற்று தவறு” என்று விமர்சித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, உயர்ந்த பதவிகளை அனுபவித்தவர்கள் இத்தகைய முடிவை எடுப்பது தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் ஒருபோதும் மாற்று முகாமிற்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த அரசியல் மாற்றங்களுக்கு ஓபிஎஸ்-ஸை மட்டும் குறை கூறாமல், “இந்த நிலைமை உருவானதற்கு நான் மட்டுமே காரணம்” என்று சசிகலா கூறியுள்ளார். கட்சியின் பிளவுகளைச் சரிசெய்ய தவறியது அல்லது காலத்தே எடுக்க வேண்டிய முடிவுகளில் ஏற்பட்ட சுணக்கமே இத்தகைய வெளியேற்றங்களுக்கு வழிவகுத்திருக்கலாம். பிரிந்து கிடக்கும் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.



