தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஹைதராபாத் ஷேக்ஹேபேட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர், 22 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதுடன், அவரது மொபைல் போனையும் சேதப்படுத்தியதாக ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த அந்த வீட்டுப் பணிப்பெண், ஸ்ரீ சாய் குட்வில் சர்வீஸ் என்ற மனிதவள ஆலோசனை நிறுவனம் மூலம் வேலை தேடி செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஹைதராபாத் வந்துள்ளார். அன்று மாலையே அவர் வெஸ்ட்வுட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை டிம்பிள் ஹயாத்தியின் வீட்டில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.
பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, அவர் ஒரு வாரம் அங்கு வேலை செய்தபோது, மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், உணவு மறுக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். “அவர்கள் அணிந்திருக்கும் காலணிகளின் மதிப்பைக் கூட எனது வாழ்க்கை பெறாது என்று கூறி என்னை அவமானப்படுத்தினார்கள்” என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், டிம்பிள் மற்றும் டேவிட் இருவரும் வேலைகளைச் செய்யச் சொல்லும்போதும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் துன்புறுத்தல் சம்பவம் கடந்த திங்கட்கிழமை காலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்போது, அந்தப் பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் நோக்கி தம்பதியினர் அச்சுறுத்தல்களை விடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பணிப்பெண் சம்பவத்தைப் பதிவு செய்வதற்காக தனது மொபைல் கேமராவை ஆன் செய்துள்ளார்.
“உடனே டேவிட் எனது மொபைலை பிடுங்கி, தரையில் அடித்து துண்டு துண்டாக உடைத்தார். அவர் என்னைத் தாக்க முயற்சித்தார். நான் உடனடியாக அங்கிருந்து தப்பித்தபோது, எனது உடைகளும் கிழிந்துபோனது” என்று அந்தப் பணிப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ஃபிலிம் நகர் காவல்துறையினர், நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் மீது இந்திய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 74 (பெண்ணின் மாண்பைக் குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி), 79 (பெண்ணின் மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் நோக்குடன் சொல், சைகை அல்லது செயல்), 351(2) (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 324(2) (தீங்கிழைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“நாங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று ஃபிலிம் நகர் ஆய்வாளர் எஸ். சந்தோஷம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் வரை இந்த வழக்கு ஃபிலிம் நகர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.