ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் கோவிந்த் சர்மா, சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து சென்ற ஒரு தம்பதியை கண்டார். அவர்களிடம் விசாரித்தபோது, குழந்தை காணாமல் போனதாக தெரிவித்ததால், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அந்தப் பெண் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரியா என்றும், அவரது லிவ்-இன் காதலர் அல்கேஷ் என்றும் தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ப்ரியா, ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அல்கேஷுடன் பழக்கம் ஏற்பட்டு ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, பிரியா நள்ளிரவு 1:30 மணியளவில் குழந்தையுடன் ஏரி அருகே சென்றதும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் மட்டும் தனியாக திரும்பியதும் பதிவாகியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மறுநாள் காலையில் ஏரியில் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பிரியா தனது காதலனுக்காக குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். “என் காதலர் அல்கேஷுக்கு என் குழந்தையை பிடிக்கவில்லை. குழந்தை எங்கள் உறவுக்கு தடையாக இருந்ததால், அவனுக்காகவே என் குழந்தையை கொன்றேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த கொலையில் அல்கேஷுக்கும் தொடர்பு உள்ளதா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : நீங்க இந்த அட்டையை வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!!