திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய விமர்சனமும், அதற்கு த.வெ.க தரப்பு அளித்த பதிலடியும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விஜய் ஒரு மேடையில் பேசிய “கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும்” என்ற வசனத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்தார். “அரசியலுக்கு வந்துவிட்டு மக்கள் பிரச்சனைகளில் மௌனம் காப்பது ஒரு நல்ல தலைவருக்கு அழகல்ல. தவறு என்றால் தவறு என்றும், சரி என்றால் சரி என்றும் சொல்ல துணிச்சல் வேண்டும். எதற்கும் பேசமாட்டேன் என்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு தவெக நிர்வாகி அருண்ராஜ் பதிலடி கொடுத்தார். “அண்ணாமலையே அமைதியாக (கம்முனு) இருந்திருந்தால், அவர் வகித்த பதவியில் தொடர்ந்து நீடித்திருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அருண்ராஜின் இந்த விமர்சனத்திற்கு அண்ணாமலை மிகவும் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். “இந்த அண்ணாமலை என்கிற நாயின் வாலை யாராலும் நிமிர்த்த முடியாது. இது உண்மையை மட்டுமே பேசுகின்ற நாய். சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிக்கும் நாய் நான் கிடையாது. இது மோடியின் மீது மிகுந்த பற்றும் நன்றியும் கொண்ட நாய்” என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நான் ஒரு உன்னதமான கொள்கைக்காகவும், மக்களுக்காகவும் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நடிகர்களுக்கு குடை பிடிப்பதற்காக என் பதவியை துறக்கவில்லை. ஜால்ரா அடித்துத்தான் ஒரு பதவியில் நீடிக்க வேண்டும் என்றால், அந்தப் பதவி எனக்கு தேவையில்லை; அது என் மயிரிழைக்குச் சமம்” என்று கடுமையாக பேசினார்.



