மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை செய்யும் இடத்திற்கே சென்று தகராறு செய்திருக்கிறார். மேலும், மாலினியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளனர். அப்போது, நடத்தப்பட்ட விசாரணையின்போது, மாலினி வைரமுத்துவை மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக தெரிவித்தார். இதனால், மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகளை நிராகரித்தனர்.
இந்நிலையில், மாலினி கடந்த சனிக்கிழமை வைரமுத்து வீட்டிற்கு சென்ற நிலையில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், திங்கள்கிழமை நாள் சரியில்லை என்று வைரமுத்துவின் பெற்றோர் கூறியதால், மாலினி வேலைக்காக சென்னை திரும்பியுள்ளார்.
இந்த சூழலில், நேற்றிரவு தனது மெக்கானிக் கடையை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வைரமுத்துவை மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். பின்னர், வைரமுத்துவை அவர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர், உயிருக்குப் போராடிய வைரமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்தபோது, “அப்பவே உன்னை வெட்டியிருக்க வேண்டும்” என்று மிரட்டிய வீடியோ பதிவை வைரமுத்துவின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், காதலியின் குடும்பத்தினர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.