இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அமீர்கான். இவர், தனது தனித்துவமான கதாபாத்திரங்களுக்காக பெயர் பெற்றவர். கமல்ஹாசனைப் போலவே, இவர் எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவார். ‘லகான்’, ‘பிகே’ போன்ற பல படங்கள் அதன் தனித்துவத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தில் அமீர்கானை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றதை போல, அமீர்கான் கதாபாத்திரமும் பேசப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ரஜினிக்கு பீடி பற்றவைக்கும் சிறிய காட்சியில் மட்டுமே அமீர்கான் தோன்றினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூலி படத்தை பற்றி அமீர்கான் பேசுகையில், “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவருடன் நடித்தது பெருமை. இந்த படத்திற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை” என்று கூறியிருந்தார்.
ஆனால், தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டு வெளிப்படையாக பேசியுள்ளார். “கூலி படத்தில் நடித்தது ஒரு தவறு. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று எனக்கே தெரியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன். லோகேஷ் என்னை வைத்து ஒரு வேடிக்கை செய்துவிட்டார். எனக்கான கதாபாத்திரத்தை அவர் சரியாக எழுதவில்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தில் அமீர்கானுக்கு நிகழ்ந்தது போலவே, லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரமும் விமர்சனத்திற்கு உள்ளானது. ‘ஒரு மேடையில், லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்’ என்று சஞ்சய் தத் பேசியிருந்தார்.



