அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிற்கிறார். தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினார். அதற்காக இன்று தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விருந்து ஏற்பாடு செய்தார்.
அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
அப்போது பேசிய சுதர்ஷன் ரெட்டி, தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளுக்கு எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி, சுகாதாரத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநில உரிமைக்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். நான் நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். தற்போது நீங்கள் எனக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். எனக்கு வாய்ப்பளித்தால் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழு மூச்சோடு போராடுவேன்” என்றார்.
ஆளுநர் பதவியின் அவசியம் குறித்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு ஏற்கனவே பலமுறை ஆளுநர் பதவி தேவையற்றது எனத் தெளிவாகக் கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். ஏனெனில், ஜனநாயகத்தில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் தலைவர்களே மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறார்கள். சில அதிகார மையங்கள் மட்டும் நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
சிலர் இந்திய அரசியலமைப்பையே பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன.“அத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளையும் ஜனநாயக மரபுகளையும் காக்க வேண்டும். இந்தியா கூட்டணி அதற்காகவே போராடி வருகிறது. நான் அந்த போராட்டத்தில் ஒரு பங்காளியாக இருக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
Read more: “தமிழர் முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்கிறது..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!