திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்த்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால் கறக்கும் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை ஆர்த்தியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்த நிலையில், இருவரும் கடந்த 5 மாதங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், முன்தினம் அதிகாலை பால் கறவைக்குச் சென்ற ராமச்சந்திரனை ஆர்த்தியின் தந்தை சந்திரன் வழிமறித்து வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்தனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட தனது காதல் கணவரை தனது தந்தை மற்றும் சகோதரர்கள் கூட்டாக சேர்ந்துதான் கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டிய ஆர்த்தி, அவர்களை கைது செய்யக் கோரி மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்த்தியின் போராட்டத்துக்கு நடுவே, அவரது கணவரின் சடலத்தை, ஆர்த்திக்குத் தெரியாமல் கணவரின் பெற்றோர் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யக் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, தனது கணவரின் உடலைத் தனக்குத் தெரியாமல் எப்படி எடுத்துச் சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பி, மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதற்கிடையே, ராமச்சந்திரன் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆர்த்தியின் சகோதரர் ரிவீன் என்பவர் ராமச்சந்திரனை செல்போனில் கொலை செய்வதாக மிரட்டி அனுப்பிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில், “நீ நரக வேதனையை அனுபவிப்பாய். என் குடும்பத்தை அசிங்கப்படுத்திய உன்னை அப்படியே விட்டால் நான் பொட்டப் பையன். உன்னைத் துண்டு துண்டாக அறுத்துக் கண்ணை நோண்டி, நரம்பை இழுத்து பயங்கரமாகக் கொலை செய்வேன்” என்று கொடூரத்தின் உச்சத்தில் மிரட்டியுள்ளார்.
இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில், தனது தந்தை மட்டுமன்றி, அண்ணன் மற்றும் அம்மா எனச் சந்திரனின் குடும்பமே சேர்ந்து ராமச்சந்திரனைக் கொலை செய்துள்ளதாக ஆர்த்தி காவல்துறையில் புதிதாகப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.