தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜகவை ஆதரிக்கும் அல்லது அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் பாசிச கட்சிகள் என்று விமர்சித்தார். மேலும், அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை என்றும் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், வேறு வழி இல்லை, நானே அந்தக் கட்சிக்காக வேலை செய்தாலும் செய்வேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது அரசியல் போராட்டமும் பிரச்சாரமும் “தரையில் கால் பதியும்” என்று தெரிவித்தார். மேலும், விஜய்யை குறிப்பிட்டு, “விஜய் போல வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்க மாட்டேன்” என்று நேரடியாக விமர்சித்தார்.
விஜய்க்கு ஒரு சவால் விடுப்பது போல தனது காலைத் தூக்கிக் காட்டிய மன்சூர் அலிகான், “இந்தக் கால் தரையில் பட வேண்டும். அடிமட்ட மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகளில் இந்தக் கால் பட வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் எப்படி இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருபவர் எல்லாம் அப்படியா இருக்காங்க? விஜய் இப்படி இருந்தால் ஒன்றுமே பண்ண முடியாது. ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
அதேபோல், விஜய் தனக்கு சமமானவர் கிடையாது என்றும், அவரைப் பார்த்துத் தான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவித்தார். விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளார், செய்யட்டும். அவரிடம் நிறைய பணம் உள்ளது, நிறைய செலவு செய்யட்டும் என்றும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.



