தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்போது தனக்கு அளிக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மூலம் தமிழக பாஜகவில் புதிய வேகத்தை கொண்டுவந்த அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கியத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது தந்தையின் உடல்நிலை குன்றியிருப்பதாகவும், அவரைப் பராமரிக்க வேண்டிய குடும்பச் சூழல் காரணமாகவே இந்தப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அண்ணாமலையின் இந்த விலகல் ஒருபுறம் குடும்பக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், மறுபுறம் அவர் கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகர், “அண்ணாமலை தானாக விலகவில்லை; அவர் விலக்கப்பட்டுள்ளார்” என்று கூறியதோடு, அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் கட்சிக்கு வெற்றி கிடைக்காது என்றும் சாடியுள்ளார். அதேபோல், திமுக அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலையின் அரசியல் நிலைப்பாடே தற்போது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவரது சொந்தக் கட்சியே அவரை ஓரம் கட்டிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Read More : உதயநிதி முதல் சீமான் வரை..!! பாதுகாப்பான தொகுதிக்கு படையெடுக்கும் தலைவர்கள்..!! புதிய தேர்தல் பிளான் என்ன..?



