கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்..
இதை தொடர்ந்து கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பண முடிப்புகளை முதல்வர் வழங்கினார்..
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இது கரூர் இல்லை.. திராவிட முன்னேற்றக் கழக ஊர்.. இந்த ஊர். கொட்டும் மழையில் தான் அறிஞர் அண்ணா அவர்கள் இதே நாளில் திமுகவை தொடங்கி வைத்தனர்.. இந்த கழகத்தின் நூற்றாண்டை நாம் காணப் போகிறோம்.. கொட்டும் மழையிலும் தொண்டர்களின் உற்சாகத்தை காணும் போது அட அட அடடா என தோன்றுகிறது..
இந்த ஆண்டு முப்பெரும் விழாவை கரூரில் நடத்த அனுமதி கேட்டு அருமை சகோதரர் செந்தில் பாலாஜி என்னிடம் வந்தார்.. நானும் ஒப்புதல் அளித்தேன்.. பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே ஏற்பாடு செய்திருக்கிறார் செயல் வீரர் செந்தில் பாலாஜி.. நாம் கோடு போட சொன்னால் ரோடு போடுவார்.. மேற்கு மண்டலத்தில் நம் எதிரிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் தான் செந்தில் பாலாஜி.. அதனால் தான் அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்க பார்த்தனர்.. அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார்.. நான் உறுதியாக சொல்கிறேன்.. கழக வரலாற்றில் இப்படி ஒரு பிரம்மாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது..
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், இந்த நிகழ்ச்சியை நடத்துவது ஒன்றே சாட்சி.. செந்தில் பாலாஜிக்கும், அவருக்கு துணை நின்ற கரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்..
14 வயதில் கருப்பு சிவப்பு கொடி பிடித்து உழைக்க தொடங்கிய என்னை, இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்திருப்பது நீங்கள் தான்.. மக்களின் ஆதரவோடு இன்று நாடே திரும்பி பார்க்கக்கூடிய திராவிட மாடல் அரசையும் உருவாக்கி என்னை முதலமைச்சர் பொறுப்பிலும் உட்கார வைத்தீர்கள்.. உங்களை சந்திப்பதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி..
திராவிட மாதத்தில் இந்த முப்பெரும் விழா நடந்து வருகிறது.. கூடி கலையும் விழாவாக இல்லாமல் அறிவார்ந்த எண்ணங்களை விதைக்கும் நிகழ்வாக இருக்கிறது..
இந்த ஆண்டு பெரியார் விருதை நாடாளுமன்ற உறுப்பினரும் எனது தங்கையும் கனிமொழி. அவர் பார்த்தால் கனிமொழி. நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி.. திராவிட இயக்கத்தின் திருமகளாக, பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்கள்..” என்று தெரிவித்தார்..



