ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.. மேலும் துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்க்கு தான் கொடுக்க வேண்டும் என்றும், தான் திமுகவின் பி டீம் இல்லை, இபிஎஸ் தான் கோடநாடு வழக்கில் ஏ1 ஆக இருக்கிறார் என்றும் விமர்சித்தார்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்தார்.. இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் 6 மாதமாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டார்.. கட்சி சார்பற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை செங்கோட்டையன் கூறினார். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று செயல்பட்டார்.
ஓபிஎஸ்.. உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கரம் கோர்த்துள்ளார்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாதென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது செங்கோட்டையனுக்கு தெரியும்.. எனவே அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி கட்சி விதிகளின் படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.. செங்கோட்டையனை நீக்கியது நான் எடுத்த தனிப்பட்ட நடவடிக்கை என்பது போன்று பேசக்கூடாது..
செங்கோட்டையனை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.. ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? ஜெயலலிதா இருந்தவரை 10 ஆண்டுகாலம் சென்னைக்கே வராதவர் செங்கோட்டையன். 10 ஆண்டுகாலம் வனசாசம் போனவர் எங்களைப் பற்றி பேசுவதா? அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. செங்கோட்டையன் போன்றவர்கள் கட்சியில் இருந்தால் எப்படி இருக்கும்.. செங்கோட்டையனின் பேச்சில் அவரின் வன்மம் வெளிப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்..



