பாமகவிற்கு துரோகம் செய்தால் அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும் என்று அன்புமணி உருக்கமாக பேசி உள்ளார்.
பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்து வரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் “ நாம் நடத்திய வன்னியர்கள் மாநாட்டை பார்த்து பலரும் வியந்தார்கள். வன்னியர்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசியிருந்தோம். வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் தருகிறேன் என்று நம்ப வைத்து திமுக 4 ஆண்டுகாலம் ஏமாற்றி கொண்டிருக்கிறது.
பாமக நடத்திய மாநாட்டை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இதனால் பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சித்து வருகிறது.. ஆனால் திமுகவின் முயற்சி ஒருநாளும் நிறைவேறாது. பாமகவில் நடைபெறும் குழப்பத்திற்கு காரணம் திமுக தான். பாமகவிலும் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது.
அடுத்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற கட்சிகளை முடக்கும் எண்ணத்தில் திமுக உள்ளது. திமுகவின் எண்ணம் ஒரு நாளும் கைகூடாது. என் கட்சிக்கும், என் மக்களுக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும்” என்று உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். கட்சிக்குள் இருக்கும் சில சூழ்ச்சியாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஐயாவுக்கும் இதைப் பற்றி தெரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை.. ஆனாலும் நான் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன். கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அமைதியாக இருப்பது என் பலம்.. அது என் பலவீனம் இல்லை. நாம் யாரை எதிர்க்க வேண்டும்? திமுக தான் நமக்கு எதிரி.. நமக்கு துரோகம் செய்தது திமுக.. நமக்குள் பிரச்சனைகள் வேண்டாம்.. சூழ்ச்சியாளர்களை நாம் எதிர்க்க வேண்டும். அவ்வளவு பெரிய கூட்டம் வந்தார்கள்.. அனைவரும் பாசத்தில் வந்தார்கள்.. தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியாலும் இதை செய்ய முடியாது. இதை பார்த்து பயந்து போய் திமுக அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்று முதலமைச்சருக்கும் தெரியவில்லை.. வேறு யாருக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் இதற்கு காரணம்.. ஸ்டாலினுக்கு எந்த துறைகளையும் இயக்க தெரியவில்லை.. மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள்.. மக்களை இன்னும் தெளிவுப்படுத்தவே ஜூலை 25-ம் தேதி நடைபயணம் தொடங்க இருக்கிறேன்.. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தான் இந்த நடைபயணம்..” என்று தெரிவித்தார்.
Read More : “பொம்மை முதலமைச்சர்.. மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை..” ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்..