பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்ததால், நடிகர் விஷால் சினிமாத் துறைக்குள் நுழைவது எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் இயக்குநர் ஆகும் ஆர்வத்துடன், நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களாக வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றதால், தமிழ் திரையுலகில் விஷாலின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது.
இந்த ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து, அவரை வைத்து படமெடுக்கப் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர். இருப்பினும், அவரால் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து வெற்றியை ஈட்டியது. அந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பும் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் விஷால், சமீபத்தில் ஒரு ஊடகப் பேட்டியில் விருதுகள் குறித்த தனது மாறுபட்ட கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர், “எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. 8 கோடி மக்களின் ரசனை என்ன? யார் சிறந்த நடிகர் என்பதை வெறும் 8 பேர் கொண்ட குழு எப்படி முடிவு செய்ய முடியும்? மக்களிடம் நேரடியாக கருத்துக் கணிப்பு எடுத்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியும்” என்று கூறியுள்ளார்.
“விருதுகள் எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. ஒருவேளை எனக்கு விருது கொடுத்தால், அதை நான் குப்பையில்தான் தூக்கி வீசுவேன். அது தங்க விருதாக இருந்தால், அதை அடமானம் வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு தேவைப்படுவோருக்கு உதவுவேன்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, நடிகர்கள் விருதுகளைப் பெறுவதை ஒரு பெருமையாகவும் கௌரவமாகவும் கருதும் நிலையில், விஷாலின் இந்த பார்வை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இருப்பினும், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், “உண்மையில் அவருக்குத் தேசிய விருதுகள் அல்லது பெரிய விருதுகள் கிடைக்காததன் ஏமாற்றத்தில்தான் அவர் இப்படிப் பேசுகிறார்” என்று விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Read More : தீபாவளிக்கு அதிரடியாக உயர்ந்த முட்டை விலை..!! கறிக்கோழி விலையும் டாப்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



