காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சை பேச்சு.. இது தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும்.. ஜோதிமணி எம்.பி காட்டம்..

FotoJet 38

காமராஜர் பற்றிய அவதூறு தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும் என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு பயணியர் விடுதியிலும் திமுக ஆட்சி காலத்தில் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக திருச்சி சிவா கூறியிருந்தார்..


அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவிற்கு தகுதி இல்லை என்றும், அவர் ஆதாரம் இல்லாமல் பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில் “ பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர்.

தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் . அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.

காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு ஜோதிமணி அளித்த பேட்டியில், கூட்டணியின் பெயரால் காமராஜரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.. காமராஜர் பற்றிய அவதூறு தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும்.. என்று கூறினார்.

Read More : “நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம்.. ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார்?” எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

RUPA

Next Post

ஆண்டி கோலத்தில் முருகன்.. பழனிக்கு நிகரான கந்தகிரி முருகன் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Thu Jul 17 , 2025
தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]
colourful temple gopurams srirangam trichy 600nw 1697136448 1

You May Like