நம் வீட்டு சமையலில் நீக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் முருங்கைக்காய், சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கிய பலன்களுக்காகவும் போற்றப்படுகிறது. சாம்பார், கறி, பொரியல் என எந்த உணவு வகையின் தரத்தையும் மேம்படுத்தும் இந்த காய்கறியில், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், இரும்பு, வைட்டமின் A மற்றும் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
முருங்கைக்காயின் பலன் அதோடு நிற்பதில்லை. இதன் இலைகள், பூக்கள், விதைகள், பட்டை என ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் முருங்கைக்காய் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இதன் மகத்துவத்தை உணர்த்துகிறது.
ஆரோக்கிய பலன்கள் :
முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுப் பிரச்சினைகளைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்துகின்றன.
வைட்டமின் A சத்து பார்வையை மேம்படுத்த உதவுகிறது. சிறுநீரகக் கற்களைக் குறைக்கவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் முருங்கைக்காய் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கெட்ட கொழுப்பைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இது இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
யாரெல்லாம் முருங்கைக்காயை தவிர்க்க வேண்டும்..?
முருங்கைக்காய் இயற்கை மருந்தாகச் செயல்பட்டாலும், சிலருக்கு இது உகந்ததல்ல. முக்கியமாக, குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) உள்ளவர்கள் முருங்கைக்காயைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், இது ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும் தன்மை கொண்டது. அதேசமயம், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்காயை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதன் “சூடான” தன்மை ஆரம்ப கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு அல்லது கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், மருத்துவரின் ஆலோசனையின்றி இதை உட்கொள்ளக் கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளவர்களும் முருங்கைக்காயை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, முருங்கைக்காய் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். இருப்பினும், குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் இதனை மருத்துவரின் ஆலோசனையின் பேரில், சரியான அளவில் உட்கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.
Read More : மரணத்தின் பிடியில் ஜப்பான்..? 6,000 பேரின் நிலைமை மோசம்..? பள்ளிகள் மூடல்..!! ஊழியர்களுக்கு WFH..!!