இந்தியாவில் இனிப்பு வகைகளை உட்கொள்ளும் பழக்கம் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக நீரிழிவு நோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, குறிப்பாக நகரங்களில் இனிப்பு நுகர்வு அதிகரித்திருப்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
கடந்த 18 மாதங்களில், மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளைச் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள், பாரம்பரிய இனிப்பு வகைகளுடன் சேர்த்து, சாக்லேட், பிஸ்கட், கேக் போன்ற நவீன இனிப்புப் பொருட்களையும் வழக்கமாக உட்கொள்கின்றன.
சுமார் 43% குடும்ப உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தில் பலர் இனிப்பு உணவுகளை அதிக ஆர்வத்துடன் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 5% பேர் தினசரி சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பதாகவும், 26% பேர் மாதத்திற்கு 15 முதல் 30 முறை சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாகவும் தெரியவந்துள்ளது. 74% நகர்ப்புறக் குடும்பங்கள் ஒரு மாதத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேல் பாரம்பரிய இனிப்புகளை உட்கொள்கின்றனர்.
நீரிழிவு நோயின் அபாயம் :
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் எம்.டி.ஆர்.எஃப். (MDRF) இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் தற்போது 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13.6 கோடி பேர் நீரிழிவு நோய் ஏற்படும் அறிகுறிகளுடன் உள்ளனர். இந்த அபாயகரமான சூழலில், பண்டிகை காலங்களில் இனிப்பு நுகர்வு அதிகரிப்பது, ஏற்கனவே நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருந்தாலும், மக்கள் இனிப்பு வகைகளை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், ஓர் ஆறுதலான தகவல் என்னவென்றால், 70% பேர் குறைவான சர்க்கரை உள்ள மாற்று உணவுகள் கிடைத்தால், அதைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், மக்கள் சிலர் சர்க்கரை உணவுகளுக்குப் பதிலாக, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற உப்பு சேர்க்கப்படாத உலர் பழங்களுக்கு மாறி வருவதும் நல்லதொரு மாற்றத்தின் அறிகுறி என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



