அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களைத் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கும் நிலையில், எப்போதுதான் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றம் குறித்து பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் டிரம்ப் தலைமையிலான கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய்ள்ள நிலையில், ”தற்போதுள்ள சூழ்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்புள்ளது. அதிபர் டிரம்ப் பதவியில் இருக்கும் வரை இது இப்படித்தான் இருக்கும். அவர் அடுத்த 3.5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை டிரம்ப்பின் அதிகாரத்தை யாரும் அசைக்க முடியாது. ஆனால், நவம்பர் 2026-ல் அமெரிக்க நாடாளுமன்றம் அவரது கட்டுப்பாட்டை விட்டு விலகும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதிநிதிகள் சபை கையைவிட்டுப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், செனட்டில் டிரம்ப் மீண்டும் பெரும்பான்மை பெறலாம். நியமனங்களைப் பொறுத்தவரை, செனட்டில் மட்டும் பெரும்பான்மை கிடைத்தாலே போதும். ஆனால், செனட் சபையும் கைவிட்டுப் போனால், டிரம்ப் தனது அதிகாரத்தை முற்றிலும் இழந்துவிடுவார். அவர் அதிபராக இருந்து எந்தப் பயனும் இருக்காது. அதன் பிறகே தங்கம் விலை குறையத் தொடங்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், “அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 5.5%க்கும் மேல் உயர்த்தினால், நிலைமை மாறும். அப்போது முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தை விற்றுவிட்டு அதிக வட்டி அளிக்கும் டாலர்களை வாங்குவார்கள். இதனால் தங்கம் விலை பயங்கரமாக குறையும். ஆனால், வட்டி விகிதம் 5.5%க்கு மேல் சென்றால், அமெரிக்கப் பொருளாதாரமே கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றும் அவர் எச்சரித்தார்.



