தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, ஆளுங்கட்சியான திமுக தனது பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் திமுக தென்மண்டல பொறுப்பாளரான கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கட்சியின் தற்போதைய பலம், தேர்தல் பணிகள் மற்றும் சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகியவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு நேரடியாக ஒரு கண்டிப்பான எச்சரிக்கையை விடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இங்கு தோல்வியைச் சந்தித்தால், மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக, தனது தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரச்சாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை தொகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம், தென்மாவட்டங்களின் தேர்தல் முடிவை கட்சி எவ்வளவு மையமாக வைத்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.



