உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.
சில சமயங்களில் ஆணுறை அணியாமல் உறவு கொண்டபோது, “ஆணுறை இல்லாமல் உறவு கொண்ட பின், இனப்பெருக்க உறுப்பை மதுபானத்தால் சுத்தம் செய்தால் கர்ப்பம் ஏற்படாது” என்று அந்தப் பெண்ணிடம் தவறான தகவலைக் கூறி அனில் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அந்த இளம்பெண், வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அவருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மூச்சுத்திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஃபரிதாபாத் போலீசார் ஆட்டோ ஓட்டுநரான அனில் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், உடலுறவுக்குத் துன்புறுத்தல் மற்றும் தவறாக வழிநடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி அனிலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.