சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், தவெக தொண்டர் ஒருவர் மிகுந்த ஆவேசத்துடன் சாட்டை துரைமுருகனை எச்சரித்துள்ளார். “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்துப் பேச வேண்டாம்; அவர் தேனி பக்கம் போவதை விடுத்துச் சேலத்திற்கு வந்து பார்க்கட்டும். இங்குள்ளவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிவிடுவார்கள். எங்கள் ஆட்கள் மிகவும் மோசமானவர்கள்; தலைவர் விஜய்க்காகத்தான் இங்கு இவ்வளவு பெரிய படை கூடியுள்ளது” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை நாகரிகமான முறையில் முன்னெடுக்க விரும்புவதாகக் கூறி வரும் நிலையில், களத்தில் உள்ள சில தொண்டர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அருவாள் கலாச்சாரத்தையும், வன்முறை மிரட்டல்களையும் கையில் எடுப்பது ஒரு புதிய கட்சிக்கு ஆரோக்கியமான தொடக்கமாக இருக்காது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.



