தமிழ்நாடு அரசால் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டாலும், இன்னும் ஏராளமானோருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தகுதியுடைய பெண்கள் மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலமாக சிறப்புச் சலுகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது தகுதி வாய்ந்த பெண்கள் ஆர்வத்துடன் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த முகாம்களில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதுதான் செல்போன் எண் ஒருங்கிணைப்பு. விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஒரே மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமானதாகும்.
அரசு நிர்வாகம் பயனாளிகளை எளிதில் அடையாளம் காணவும், அரசின் அறிவிப்புகள் அல்லது உதவித்தொகை வரவு வைக்கப்பட்ட தகவல் போன்ற முக்கியக் குறுஞ்செய்திகளை (SMS) சம்பந்தப்பட்ட நபருக்குத் தாமதமின்றி சென்றடையச் செய்யவும் இந்த எண் ஒருங்கிணைப்பு உதவிகரமாக இருக்கும். ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் வெவ்வேறு எண்கள் இருந்தால், அரசு தகவல்கள் பயனாளிகளுக்குச் சென்றடைவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விரைவாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.