நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பிரபல பாலாசாரியரும், கவிஞருமான வைரமுத்து தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 7,500க்கும் மேற்பட்ட பாடல்களையும், கவிதையும் அவர் எழுதி உள்ளார்.. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது 7 முறை வென்றுள்ளார். மேலும் தனது ஏராளமான இலக்கியப் பணிகளுக்காக, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சமூக ஊடகங்களில் நல்ல நகைச்சுவைகளைப் பார்க்கிறேன். தப்பும் தவறுமாய்த் தமிழ் எழுதுகிறவர்கள் சரியான எழுத்தைத் தவறென்கிறார்கள்.. ‘ட’ண்ணகரம் ‘ற’ன்னகரம், பொது ‘ள’கரம் வகர ‘ல’கரம் எங்கே ஆளப்பட வேண்டும் என்று அறியாதவர்கள் தேவையில்லாத திருத்தம் சொல்கிறார்கள்.
வினைத்தொகையில் வல்லெழுத்து மிகாது என்று அறியாதவர்கள் ’ஊறுக்காய்’ என்று எழுதித் தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்.. ’நினைவுகூறுதல்’ என்றே எழுதிப் பழக்கப்பட்டவர்கள் ’நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லாட்சியைத்
தவறென்று சொல்லித் தமிழின் கற்பைச் சந்தேகப்படுகிறார்கள்..
’எலும்புவில் தேய்மானம்’ என்று எழுதுவது தவறென்று அறிந்தவர்கள் கூடக் ’கொழும்புவில் குண்டுவெடிப்பு’ என்று எழுதுகிறார்கள்.. வருமொழி வடமொழியாகவோ
மெல்லொலியாகவோ இருப்பின் வல்லெழுத்து மிகத்தேவையில்லை என்ற பொதுவிதி அறியாதவர்கள் எனது தண்ணீர் தேசம் நாவலில் ‘த்’ எங்கே என்று குத்துகிறார்கள்.
திருநிறைசெல்வியே சரி என்று தெரியாதவர்கள் திருநிறைச்செல்வி என்று எழுதிப்
பிழையே சரியென்கிறார்கள்.. இவர்களோடு மல்லுக்கட்டுவதை நான் அழகான சண்டை என்றே கருதுகிறேன்.. எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன்.. நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள்.. சரியானதைப் பழிப்பதன் மூலம்
தப்புக்குத் தங்க முலாம் பூசாதீர்கள்..
தமிழ் வளர்ச்சித்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சிக் கழகம், உலகத் தமிழ்ச் சங்கம் முதலிய அமைப்புகள் தமிழர்களின் அன்றாடத் தமிழோடு இயங்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.