இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் பெரும் சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் ஓலா நிறுவனம், புதிய வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை அதன் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அடுத்த தயாரிப்பு நிகழ்வை ஜூலையில் அறிவிக்க உள்ளோம். இதை #endICEAge நிகழ்ச்சி என்று அழைக்கிறோம். S1 ப்ரோ, S1 ஏர் உடன் … XXXX .. மேலும் ஒரு பைக் இணைகிறது!” என்று அகர்வால் உறுதி செய்துள்ளார்.
இதனுடன், புதிய ஸ்கூட்டர் போன்று தோற்றம் அளிக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கும் எரியும்படியான டீஸர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ஓலா தரப்பில் இருந்து நாட்டில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் விற்கப்படுகிறது. அவை Ola S1, Ola S1 Air, Ola S1 Pro ஆகியவை ஆகும். ஓலா எஸ்1 ஏர் டெலிவரி இந்தாண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடங்கியிருக்கிறது. மேலும், ஓலா நிறுவனம் புதிய ஹெல்மெட் கண்டறிதல் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அம்சத்தின் வாயிலாக வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? இல்லையா? என்பதைக் கண்டறிய கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இது பின்னர் வாகனக் கட்டுப்பாட்டு அலகு (VCU) உடன் பகிரப்படும். பின்னர், மோட்டார் கட்டுப்பாட்டு அலகுக்கு (MCU) அனுப்பப்படும். வாகனம் ரைடு மோடுக்கு மாறுமா? இல்லையா? என்பதை MCU யூனிட் தான் முடிவு செய்யும்.
இந்த அம்சம் குறித்து எளிதாக சொல்ல வேண்டும் என்றால், வாகனம் ரைடு பயன்முறையில் இருந்தால், ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? என்பதை கேமரா கண்காணிக்கும். அப்படி பெறப்பட்ட தகவலில் அவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் இ-ஸ்கூட்டர் தானாகவே பார்க்கிங் முறைக்கு மாறும் என்று அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை நினைவூட்டும் அறிவிப்பு டேஷ்போர்டில் அனுப்பப்படும். வாகனத்தை ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்திருப்பதை கணினியால் கண்டறிய முடிந்தால் மட்டுமே, ஸ்கூட்டரின் VCU அமைப்பு பைக்கை ரைடு முறைக்கு மாற்ற அனுமதிக்கும். மேலும், அது தொடர்ந்து ரைடரைக் கண்காணிக்கும்” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஜூலை மாதம் முதல் ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்க உள்ளது. Ola S1 Air 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை இ-ஸ்கூட்டர் இதுவாகும். 3 வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டரின் அடிப்படை மாடலின் விலை ரூ.84,999 என்ற ஆரம்ப விலையுடன் கிடைக்கிறது.