இரவு முழுவதும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அயன், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் பல்வேறு மண்டலங்களுக்கும் நேரடி நன்மை தரும் தன்மை பெற்றது.
உலர் திராட்சை தண்ணீரில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இதனால் நோயெதிர்ப்பு திறன் மேம்படுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வின் படி, திராட்சை தண்ணீர் குடித்த சில நிமிடங்களில் கூட, இரத்தத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் அளவு அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
நார்ச்சத்து மிக்க உலர் திராட்சை, செரிமானத்தை மென்மையாக்கும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, குடலின் இயக்கத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல், குடலுக்குத் தேவையான நன்மைபடும் பாக்டீரியாக்களுக்கு ஊட்டமாகவும் செயல்படுகிறது. இது, மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான கோளாறுகளை குறைக்கும்.
கருப்பு நிற உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டி, இரத்த சோகையை தடுக்கும் முக்கியக் காரணியாகும். இதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தியை இயற்கையாகவே பெறலாம். காலையில் உலர் திராட்சை தண்ணீருடன் தொடங்கினால், நாள் முழுவதுக்குமான ஊக்கத்தை பெறுவது சாத்தியமாகிறது.
உலர் திராட்சை தண்ணீரில் இருக்கும் பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு நன்மை தருகின்றன. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்ட இந்த தண்ணீர், உங்கள் நாளைய ஒரு சிறந்த ஆரம்பமாக மாற்றும் திறன் வாய்ந்தது.
உலர் திராட்சை தண்ணீர் உங்கள் சருமத்தையும் பளிச்சென வைத்திருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள், சருமத்தை இளமையாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, செல்களின் அழிவைத் தடுக்கிறது.
உலர் திராட்சைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. கருப்பு மற்றும் தங்க நிற உலர் திராட்சைகள். கருப்பு திராட்சைகள் இயற்கையாக வெயிலில் உலர்த்தப்படுவதால், இதில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. அதேசமயம், தங்க நிற உலர் திராட்சைகள் சல்பர் டைஆக்சைடு மூலம் பதப்படுத்தப்பட்டு இயந்திரத்தில் உலர்த்தப்படுகின்றன. சுவையில் மென்மையாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்களில் கருப்பு உலர் திராட்சைகள் முன்னிலையில் இருக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.