மீன் என்பது பலராலும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதயத்தின் ஆரோக்கியம், மூளையின் செயல்திறன் உள்ளிட்ட பல உடல் இயக்கங்களுக்குத் தேவையான புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மீனில் அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த ஆரோக்கிய உணவைப் பெற்றாலும், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால், சில பாதிப்புகளும் உண்டாகும்.
இதுதொடர்பாக உணவியல் நிபுணரும், ஹோலிஸ்டிக் ஹெல்த் ஆலோசகருமான ஸ்வேதா ஷா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மீன் உணவுடன் தவறாக சேர்த்துக் கொள்ளப்படும் சில உணவுகள் எவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
➥ பலரும் சாதாரணமாக செய்யும் ஒரு தவறு மதுபானம் அருந்தும்போது மீனை தேர்வு செய்வது தான். இது மிகவும் ஆபத்தான ஒரு கலவையாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீனில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், மது அருந்தும்போது கல்லீரலில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நீண்ட காலத்தில் மாரடைப்பு, கல்லீரல் பிரச்சனைகள் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கும்.
➥ மீன் சாப்பிட்ட உடனேயே பால், தயிர், நெய், சீஸ் போன்ற பொருட்களை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரம்பரிய முறையில் சொல்லப்பட்டு வரும் ஆயுர்வேதக் கோட்பாடு இதை கடுமையாக எதிர்க்கிறது. பால் மற்றும் மீன் இரண்டும் இயற்கையில் வேறுபட்ட உணவுக் குழுக்களில் சேரும் என்பதால், இவை ஒரே நேரத்தில் சேரும்போது செரிமானக் கோளாறுகள், தோல் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது.
➥ வறுத்த மீனுக்கு எலுமிச்சை சாறு பிழிவது ஒரு பரவலான நடைமுறைதான். ஆனால், இதுவும் ஆபத்துக்களைக் கொண்டிருக்கும் என நிபுணர் எச்சரிக்கிறார். குறிப்பாக பழைய மீன் அல்லது தவறாக சேமிக்கப்பட்ட மீன்களில், எலுமிச்சை சாறின் அமிலத்தன்மை ‘ஆர்சனிக்’ போன்ற நச்சுத்தன்மையை உருவாக்க வாய்ப்பு உண்டு. எனவே, மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
➥ கீரை வகைகள், கொத்தமல்லி போன்ற பச்சை காய்கறிகள், சாதாரணமாக ஆரோக்கிய உணவுகளாக கருதப்படும். ஆனால், மீனுடன் சேர்த்து இவைகளை உண்பது ஒரு சிலருக்கு ஹர்ஷமான விளைவுகளை ஏற்படுத்தும். இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள், சேர்க்கையால் சரியாக உறிஞ்சப்படாமல் விடுகிறது. மேலும் வாயு, குடல் உப்புசம், செரிமான கோளாறு போன்றவை உருவாகலாம். எனவே, மீன் உணவுக்கும் பச்சை காய்கறிகளுக்கும் இடையில் குறைந்தது 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
➥ மீன் சாப்பிட்டதும் உடனே குளிர்பானங்கள் குடிப்பது ஒரு சிலருக்கு வழக்கமான பழக்கமாக இருக்கலாம். ஆனால், இது மிக மோசமான ஒரு உணவுக் கலவையாக இருக்கலாம். குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை, செயற்கை சுவைகள் மற்றும் கார்பனேட் ஆகியவை, மீனின் ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. மேலும், செரிமானத்தை மெதுவாக்கி, வாயு, உப்புசம் போன்றவற்றை உருவாக்கும்.
➥ தற்போது பலர் விரும்புவது வறுத்த மீன் + ஃபாஸ்ட் ஃபுட் காம்போ தான். இந்தக் கலவை, உடலுக்குப் பெரும் சுமையாகும். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்புச் சேர்க்கைகளால், இதய நலத்திற்கும், செரிமான செயல்முறைக்கும் தடையாக அமைகிறது. வறுத்த மீனை சீராக, குறைந்த எண்ணெயில் சமைத்து, தனியே உண்ணும் பழக்கம் பெரும்பாலும் பாதுகாப்பானது.
➥ பழுப்பு அரிசி, பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து அதிகமான உணவுகளை, மீனுடன் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது அல்ல. இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் உணவுகள். ஒரே நேரத்தில் சேரும் போது, செரிமான சக்தி மீறி செயல்பட வேண்டியிருக்கும். இதனால் வயிற்று வீக்கம், அஜீரணம் போன்றவை உருவாக வாய்ப்பு அதிகம்.
➥ மீன் உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கமும் சிலருக்கு இருக்கும். இது உடனடியாக தீங்கு விளைவிக்காமல் போகலாம். ஆனால், சர்க்கரையின் அளவுகள் உயரும் போது, நீரிழிவு அபாயம், எடை கூடுதல், செரிமான சிக்கல்கள் போன்ற பல சீர்கேடுகளுக்கு வழி வகுக்கும். அதனால், இனிப்புகளுக்கும் ஒரு இடைவெளி அவசியம்.



