தீக்காயம் என்பது எளிதாக நிகழக்கூடிய விபத்து. சமையலறையில் தவறாக தொடும் அடுப்புத் தீ முதல், எரிவாயு விபத்து வரை இதன் தீவிரம் சிறியது முதல் கடுமையானது வரை இருக்கலாம். ஆனால், தீக்காயம் ஏற்பட்டவுடனே நாம் எடுக்கும் நடவடிக்கைகளே, அதன் பின்விளைவுகளை தீர்மானிக்கும். தவறான முறையில் கையாளும்போது ஒரு சிறிய தீக்காயம் கூட பெரிய மருத்துவ பிரச்சனையாக மாறக்கூடும்.
முதலில், தீக்காயம் ஏற்பட்ட உடனே அந்த இடத்தில் உள்ள வெப்பத்தையும், எரிச்சலையும் குறைப்பது தான். இதற்காக மருந்தோ, குளிரூட்டும் கிரீமோ தேவை இல்லை. சாதாரண அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரே போதும். தீக்காயம் பட்ட இடத்தில் மெதுவாகத் தண்ணீர் ஊற்றி அந்த வெப்பத்தை குறைக்க வேண்டும்.
சிலருக்கு பனிக்கட்டி வைத்தால்தான் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றும். அது முற்றிலும் தவறானது. ஐஸ் அல்லது ஐஸ் வாட்டர் வைப்பது, சில நிமிடங்கள் ஜில்லென்று உணர்ச்சியைத் தரலாம். ஆனால், பிறகு அந்த இடத்தில் இருக்கும் தோல் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகி, கொப்பளங்கள் அதிகமாகி விடும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தை மூடுவதும் அவசியம். மிக மென்மையான, சுத்தமான பருத்தி துணி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது தோலை அழுத்தாமல், இருக்க வேண்டும். எதையும் வலுவாக தேய்ப்பது அல்லது கட்டிகள் உருவாகும் வரை துடைப்பது மிகவும் ஆபத்தானது. அப்படி செய்தால் மேலிருந்த தோல் சிதறி, காயம் ஆழமடையும் வாய்ப்பு அதிகம்.
பெரும்பாலானவர்கள் தீக்காயம் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு செல்லும் முன் வீட்டு வைத்தியங்களை செய்வார்கள். பேனா இங்க், காபி பொடி, மஞ்சள், பட்டர், தேன் என பல “தாத்தா பாட்டி வைத்தியம்” உண்டு. ஆனால் இவை, தீக்காயத்திற்கான உண்மையான தீர்வல்ல. உண்மையில், இதை எல்லாம் பயன்படுத்திய பிறகு மருத்துவரை சந்திக்கும்போது, முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்யவே மருத்துவர் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். இது சிகிச்சையை தாமதமாக்கும்.
எளிய தவறுகள் பெரும் பிரச்சனையாக மாறாமல் இருக்க, இந்த சில விஷயங்களை நினைவில் வைத்திருப்பது அவசியம். வீட்டில் நேரம் கழிப்பதைவிட, மருத்துவமனையில் உரிய சிகிச்சையை பெறுவது தான் நமது உடலுக்கு நல்லது.
முக்கியமாக, தீக்காயம் ஏற்பட்டவுடன் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், முறையான முதல் உதவியை செய்த பிறகு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வதே சிறந்த தீர்வாகும். தண்ணீரால் கழுவி, மென்மையான துணியால் மூடி, நேரடியாக மருத்துவ உதவி பெறுவது மட்டுமே தீக்காயத்திலிருந்து விரைவில் மீள வழிவகுக்கும்.
எளிய தவறுகள் பெரும் பிரச்சனையாக மாறாதிருக்க, இந்த சில விஷயங்களை நினைவில் வைத்திருப்பது அவசியம். வீட்டில் நேரம் கழிப்பதைவிட, மருத்துவமனையில் உரிய சிகிச்சையை பெறுவது தான் நமது உடலுக்கு நல்லது.