வரி இல்லாத நீண்டகால முதலீட்டைத் தேடுபவர்களுக்கு தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் தற்போது அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த திட்டம், முழுமையான பாதுகாப்பும் வரி சலுகைகளும் கொண்டது.
PPF திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.411, அதாவது மாதத்திற்கு ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.43.60 லட்சம் கிடைக்கும். இதில் மட்டும் வட்டி வருமானம் ரூ.21.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: PPF கணக்கு திறந்த நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இந்த காலம் முடிந்ததும், நீங்கள் விரும்பினால் அதை 5 ஆண்டுகள் கூடுதலாக நீட்டிக்கலாம். நீட்டித்த காலத்திலும் நீங்கள் முதலீடு தொடரலாம் அல்லது வட்டி மட்டும் பெறலாம். 15 ஆண்டுகள் முடியும் வரை, முழுமையாக பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது, ஆனால் 7ஆம் ஆண்டிலிருந்து பகுதியளவு திரும்பப்பெறல் (partial withdrawal) அனுமதிக்கப்படுகிறது. இந்த நீண்ட கால அமைப்பு, ஓய்வூதியம், குழந்தை கல்வி, திருமணம் போன்ற நீண்டநாள் இலக்குகளுக்கான சிறந்த சேமிப்பு வழி ஆகும்.
PPF திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.9%. இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு, ஆண்டு முடிவில் சேர்க்கப்படுகிறது. வட்டி விகிதம் அரசு ஒவ்வொரு 3 மாதத்திற்கும் (quarterly) மறுஆய்வு செய்யப்படும். வட்டி முழுமையாக வரிவிலக்கு, அதாவது இதில் கிடைக்கும் லாபம் மீதான வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) குறைந்தபட்சம் ₹500 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
அதைச் செய்யாவிட்டால், கணக்கு செயலிழக்கலாம் (inactive).செயலிழந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, ₹500 குறைந்தபட்ச தொகை + ₹50 அபராதம் செலுத்த வேண்டும். இதனால், சிறிய தொகையிலிருந்தே சேமிப்பு பழக்கம் தொடங்க முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஒரு நபர் ஆண்டுக்கு அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்யலாம். இதை ஒரே முறையாகவோ, அல்லது அதிகபட்சம் 12 தவணைகளாக (மாதந்தோறும் அல்லது காலாண்டு அடிப்படையில்) செலுத்தலாம். அதற்கு மேல் செலுத்தினாலும், அதற்கு வட்டி கிடையாது.
வரிச் சலுகை: PPF திட்டம் வரி விலக்கு அளிக்கும் மூன்று நிலைகளைக் கொண்டது. இதை EEE (Exempt-Exempt-Exempt) திட்டம் என்றும் கூறுவர்.
முதலீட்டுத் தொகை: வருமான வரி சட்டம் பிரிவு 80C கீழ் வருடத்திற்கு ₹1.5 லட்சம் வரை கழிவு பெறலாம்.
வட்டி வருமானம்: கிடைக்கும் வட்டி முழுமையாக வரி விலக்கு.
முதிர்வுத் தொகை: 15 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் தொகைக்கும் வரி இல்லை.