தபால் அலுவலகம் வழங்கும் தொடர் வைப்பு (Recurring Deposit) திட்டம், குழந்தைகளுக்கு சேமிப்புடன் வட்டியும் தரும் சிறந்த வாய்ப்பாகும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ.100 முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
தற்போது, இந்த திட்டத்திற்கு வருடாந்திர 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு, 5 ஆண்டுகள் நிறைவில் முதலீட்டு தொகையுடன் சேர்த்து முதிர்ச்சித் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம், குழந்தைகள் தங்களின் சேமிப்பு பணம் மெதுவாக அதிகரிப்பதை காணும் போது, அவர்களுக்கு முதலீட்டின் மதிப்பு புரியும்.
உதாரணமாக, பெற்றோர் ஒருவர் குழந்தைக்காக மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால், வருடத்திற்கு ரூ.6,000 முதலீடு செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.30,000 ஆகும். இதற்கு 6.7% வட்டியுடன் ரூ.5,681 கூடுதலாக கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகள் முடிவில் ரூ.35,681 முதிர்ச்சித் தொகையாக வழங்கப்படும்.
இந்த கணக்கை குழந்தையின் பெயரில் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்களது பெயரில் தனிப்பட்ட கணக்கையும் தொடங்கலாம். 10 வயதுக்கு குறைவானவர்கள் என்றால், பெற்றோர் (அம்மா அல்லது அப்பா) குழந்தையின் சார்பில் கணக்கைத் திறக்கலாம். கூடுதலாக, கூட்டுக் கணக்கு வசதியும் இதில் உள்ளது.
ஒருவர் எத்தனை தொடர் வைப்பு கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதும் சிறப்பம்சமாகும். மொத்தத்தில், தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம், குழந்தைகளுக்கு சிறுவயதில் சேமிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுப்பதற்கும், அவர்களின் எதிர்கால நிதி அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
Read more: Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் கொரில்லா 450.. புதிய நிறத்தில் அறிமுகம்..! விலை என்ன..?