திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான திருப்பட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலம், ஒரு தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கிறது.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
இத்தலத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு சமயம், சிவபெருமானைப் போலவே 5 தலைகளைக் கொண்டிருந்த பிரம்மனுக்குத் தன்னைப் பற்றிய கர்வம் ஏற்பட்டதாம். இதனால் சினமடைந்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்ததுடன், அவரிடம் இருந்த படைக்கும் சக்தியையும் பறித்தார்.
தனது தவறை உணர்ந்த பிரம்மன், திருப்பட்டூர் பூமிக்கு வந்து 12 சிவலிங்கங்களை ஸ்தாபித்து மனமுருகிப் பூஜித்தார். பிரம்மாவின் பக்தியில் மனம் இரங்கிய சிவபெருமான், அவருக்குப் படைக்கும் திறனை மீண்டும் அளித்ததோடு, ஒரு அற்புதமான வரத்தையும் வழங்கினார். “இனிமேல், திருப்பட்டூருக்கு வந்து உன்னை வேண்டி வழிபடுபவர்களின் தலையெழுத்தை நீ நல்ல விதமாக மாற்றி எழுத வேண்டும்” என்பதே அந்த வரம். அன்றிலிருந்து பிரம்மதேவர் இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி எழுதுவதாக ஐதீகம்.
இந்த பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் தனிச்சிறப்பே பிரம்ம சன்னிதிதான். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் மஞ்சள் காப்பில் மின்னும் பிரம்மனின் தரிசனம் மிகவும் விசேஷமானது. மேலும், இக்கோயிலில் தரிசனம் செய்யும் வரிசையிலும் ஒரு மகத்துவம் உள்ளது. இங்கு முதலில் குருவான தட்சிணாமூர்த்தி, அடுத்து பிரம்மா, அடுத்து விஷ்ணு, அதன் பிறகு மூலவரான சிவபெருமான் என வரிசையாக வழிபடுவது மரபு.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தின் தத்துவத்தை நேரில் உணர்த்துவது போல் இந்த சன்னிதி வரிசை அமைந்துள்ளது. இதுதவிர, குழந்தைகள் இரவில் அழுது தொல்லை கொடுக்காமல் இருக்க அருள் புரியும் மேற்கு பார்த்த காலபைரவர், 16 பட்டை கொண்ட லிங்கம் எனப் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்கள் இங்கு ஏராளம்.
ஜாதகத்தில் குரு தோஷம், திருமணத் தடங்கல், தொழிலில் முன்னேற்றமின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் திருப்பட்டூர் வந்து பிரம்மனை தரிசிப்பது சிறந்த பரிகாரமாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள பிரம்மா சன்னிதிக்கு வந்து 36 விளக்குகளை ஏற்றி, 108 புளியோதரைகளை நெய்வேத்தியம் செய்து, 9 முறை வலம் வந்தால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நமது வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கட்டாயம் ஒருமுறையாவது திருப்பட்டூர் பிரம்மாவை தரிசித்து வர வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் தலையெழுத்து நல்லபடியாக மாறும் என்று நம்பப்படுகிறது.



