கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். பேராசிரியரின் அழைப்பை ஏற்று மாணவி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு பேராசிரியர் சஞ்சீவ் குமார் மட்டுமே தனியாக இருந்துள்ளார்; அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை.
பேராசிரியரின் வீட்டில் யாரும் இல்லாததால், முதலில் வீட்டுக்குள் செல்ல மாணவி தயக்கம் காட்டி மறுத்துள்ளார். ஆனால், சஞ்சீவ் குமார் மாணவியை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
உள்ளே சென்ற பிறகு, குறைவான வருகைப் பதிவு சிக்கலை தான் சரி செய்து கொடுப்பதாக மாணவியிடம் அவர் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக, தான் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி, அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சமயத்தில் மாணவியின் தோழி ஒருவர் அவருக்குச் செல்போனில் அழைத்துள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மாணவி, தனக்கு அவசரமாக அழைப்பு வந்திருப்பதாகக் கூறி, அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.
பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அந்த மாணவி உடனடியாகத் தனது பெற்றோர் மற்றும் சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேராசிரியர் சஞ்சீவ் குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இதை மட்டும் மாற்றினால் உடனே 3 கிலோ வரை உடல் எடை குறையும்..!! செம ரிசல்ட்..!! டிரை பண்ணி பாருங்க..!!