சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து புதிய கட்டுமானங்கள் நடைபெறுவது சாதாரணமாகி விட்டது. இந்த சூழலில், பழைய கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றிவிட்டு புதிய கட்டுமானத்திற்கு தயாராகுவோருக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அனைத்து மண்டலங்களிலும் கடந்த மே மாதம் 21-ந்தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள்படி அனைத்து கட்டுமானப் பொருட்கள், தோண்டப்பட்ட மண், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும்.
இதை பொதுச் சாலைகள், நடைபாதைகள், சாலை ஓரங்களில் கொட்டுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 500 சதுர மீட்டர் முதல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரை உள்ள கட்டிட பரப்பளவிற்கு ரூ.25 ஆயிரமும், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டிட பரப்பளவிற்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள், வேலியிட்ட குடியிருப்பு வளாகங்கள், பெரும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடைபெறுவது மாநகராட்சியின் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, சென்னை மாநகராட்சி சார்பில் வருகிற 22-ந்தேதி முதல் இந்த வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது எந்தவிதமான தளர்வுமின்றி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



