தமிழ்நாட்டில் சமூக நலத்திட்டங்களின் முக்கிய அங்கமாக செயல்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இலவசமாக அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கணிசமான தொகை உணவுப் பொருட்கள் விநியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிலையில், இந்த நிதியும் திட்டமும் எளிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். ஆனால், சிலர் இத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் போலி முகவர்கள் அல்லது தவறான தகவல்களுடன் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தவறான முகவரி, போலியான குடும்ப விவரங்கள், எரிவாயு (LPG) இணைப்பு பற்றிய தகவல்களை மறைத்தல் போன்ற செயல்கள், சட்டத்தின் படி கடுமையான குற்றமாக கருதப்படும். இது 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அத்தியாவசியப் பண்ட சட்டம்’ன் கீழ் தண்டனைக்குரியது. இந்த தவறுகளை மேற்கொள்பவர்கள் மீது அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து குற்றவியல் வழக்குகளும் தொடரக்கூடும். அதுமட்டுமின்றி, தவறான தகவல்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் நிராகரிக்கப்படலாம்.
அதனால், புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பிக்க இருக்கும் குடிமக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சரியான விவரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். ஏற்கனவே குடும்ப அட்டை உள்ளவர்களின் பெயரை மறுபடியும் சேர்ப்பது, போலி முகவரி விவரங்களை வழங்குவது அல்லது ஏற்கனவே ஒரு முகவரியில் ரேஷன் கார்டு இருந்தும் மற்றொரு முகவரியில் மீண்டும் விண்ணப்பிப்பது போன்ற செயல்கள் குற்றமாகும்.