அஞ்சல் அலுவலகம் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமாக “பால் ஜீவன் பீமா யோஜனா” என்ற திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், மிகக் குறைந்த முதலீட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சேமிப்பை உருவாக்க முடியும் என்பதாகும்.
இந்தத் திட்டத்தில் தினசரி ரூ.6 முதல் ரூ.18 வரை சேமிப்பு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேரும் குழந்தைகளின் வயது 5 முதல் 20 வயது வரை இருக்க வேண்டும். மேலும், சேமிப்பு பெற்றோரின் பெயரில் அல்லாமல், குழந்தையின் பெயரிலேயே தொடங்கப்பட வேண்டும். பாலிசி எடுக்கும் பெற்றோரின் வயது 45 ஆண்டுகளைத் தாண்டக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள் வரை இந்தத் திட்டத்தின் பயனை பெறலாம். தினசரி ரூ.6 சேமித்தால், பாலிசி முடிவில் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் வரை பெற முடியும். தினசரி ரூ.18 சேமித்தால், இது ரூ.3 லட்சமாக உயரும். அதேபோல், இரண்டு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.18 வீதம் (மொத்தம் ரூ.36) சேமித்தால், முதிர்வுக் காலத்தில் சுமார் ரூ.6 லட்சம் வருமானம் கிடைக்கும்.
இந்தப் பாலிசி காலம் முடிவதற்கு முன் பெற்றோரில் யாராவது உயிரிழந்தால், மீதமுள்ள பிரீமியம் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இருப்பினும், பாலிசி தொடரும்; காலம் முடிந்த பின்னர் முழுத் தொகையும் குழந்தையிடமே வழங்கப்படும். இதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்படையும்.
இந்தத் திட்டத்தில் கடன் வசதி கிடையாது. ஆனால், குறைந்தது 5 ஆண்டுகள் கழித்து விரும்பினால் பாலிசியை ஒப்படைக்கும் வசதி உள்ளது. மேலும், ஒவ்வொரு ரூ.1,000 காப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுதோறும் ரூ.48 போனஸ் வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, குழந்தை மற்றும் பெற்றோரின் விவரங்கள், அடையாளம் மற்றும் முகவரிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து கணக்கைத் தொடங்கலாம்.
Read more: மக்களே உஷார்..! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.. வந்தது அலர்ட்..



