வேகமாக மாறிவரும் நுகர்வு கலாச்சாரத்தின் நடுவே, நாளைய தேவைகளை முன்னிட்டு இன்று சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகம் காணப்படுவதில்லை. இதனாலேயே மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அவற்றுள், மிகவும் நம்பகத்தன்மையுடனும், நீண்ட கால நலன்களுடனும் திகழ்கிறது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம். இந்த திட்டம், சிறிய முதலீட்டில் கூட உத்தரவாதமான வருமானத்தை அளிக்கக்கூடியது. மேலும், வரி விலக்கு உள்ளிட்ட நன்மைகள் பொதுமக்களுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
PPF கணக்கின் அடிப்படை முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை இரண்டு முறை தலா 5 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்பதால், அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை கணக்கை வைத்திருக்கலாம். இந்த நீண்ட கால சேமிப்பு முறையே, ஓய்வூதியத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பாதுகாக்கும் வழி எனலாம்.
ஒருவர் மாதந்தோறும் ரூ.3,000 சேமிப்பாகச் செலுத்தினால், 25 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.24 லட்சம் ஆகும். இதில் மொத்த முதலீடு ரூ.9 லட்சம் என்றாலும், வட்டி வருமானம் ரூ.14.77 லட்சம் வரை உயர்வது, PPF திட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
அதோடு, வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு, வட்டி வருமானத்துக்கும் வரி விலக்கு, முழுமையான “EEE” (Exempt-Exempt-Exempt) பிரிவில் இடம் பெறுவது போன்ற அம்சங்கள், இந்தத் திட்டத்தை மற்ற முதலீட்டு வாய்ப்புகளை விட தனித்துவமாக்குகின்றன.
மிகவும் முக்கியமாக, பங்கு சந்தை போன்ற ஆபத்துகள் இங்கு இல்லை. பாதுகாப்பான சேமிப்பை விரும்பும் குடும்பங்களும், ஓய்வூதியம் பிந்தைய வாழ்க்கையை உறுதிப்படுத்த நினைப்பவர்களும், PPF திட்டத்தை ஒரு நீண்ட கால முதலீட்டு நம்பிக்கையாகக் கருதலாம்.
Read more: RSS-க்கு அஞ்சல் தலை.. அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் சாடல்!



