மக்களின் நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு சார்பில் பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுதான் தபால் அலுவலகத்தின் Recurring Deposit (RD) எனப்படும் தொடர் வைப்புத் திட்டம். இந்தத் திட்டம் சிறிய அளவில் சேமிக்கும் மக்களுக்குக் கூட பெரிய தொகை வருமானத்தைத் தரக்கூடியது என்பதால், தற்போது இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
தபால் அலுவலக RD திட்டத்தில், மாதம் ரூ.100 முதலீட்டில் கூட கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். விருப்பமிருந்தால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும். திட்டத்தில் வருடாந்திர வட்டி விகிதம் 6.7% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 3 மாதங்களிலும் வட்டி கணக்கிட்டு முதலீட்டாளர் கணக்கில் சேர்க்கப்படும். இதுவே இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
தினந்தோறும் ரூ.340 சேமித்தால், அதாவது மாதம் சுமார் ரூ.10,200 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.17 லட்சம் வரை பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கான தவணைகளை முடித்திருந்தால், முதலீட்டாளர்கள் 50% வரை கடன் பெறலாம். மேலும், இந்தக் கடனுக்கான வட்டி விகிதமும் குறைவாகவே இருக்கும். RD முதிர்ச்சி அடையும் வரை அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
யார் யார் இதில் இணையலாம்? இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் RD கணக்கை தொடங்கலாம். தனிநபர் அல்லது கூட்டு கணக்கு (Joint Account) முறையிலும் துவங்க முடியும்.
தேவையான ஆவணங்கள்: RD கணக்கைத் துவங்குவதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருந்தாலே போதும். இந்தக் கணக்கை போஸ்ட் ஆபீஸிலும் அல்லது ஆன்லைனிலும் துவக்க முடியும். தபால் சேமிப்பு திட்டங்கள் அரசின் முழு உத்தரவாதத்துடன் நடைபெறும் என்பதால், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி. அதோடு, நிலையான வட்டி மற்றும் நம்பகத்தன்மையுடன் இந்த RD திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read more: கீரை நல்லதுதான்.. ஆனால் இந்த உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தொடாதீங்க..!



