இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது.
அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் பயணிகளுக்கு ரூ.1,000 வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நேரடியாக அவர்களின் FASTag கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தச் சிறப்புத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
ரூ.1,000 வெகுமதி பெறுவது எப்படி..?
முதலில் ‘ராஜ்மார்க்யாத்ரா’ (Rajmargyatra) என்ற செயலியைப் புதுப்பித்து அல்லது பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், NHAI-இன் பராமரிப்பில் உள்ள கட்டணச் சாவடிகளில் உள்ள சுகாதாரமற்ற கழிவறைகளின் தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும். இந்தப் புகைப்படத்தில் நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதியாக, பயனரின் பெயர், இடம், வாகனப் பதிவு எண் (VRN) மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களுடன் புகாரைச் செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையைப் பின்பற்றிச் சரியான புகார் அளிக்கும் ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணுக்கும் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த வெகுமதி பணமாக வழங்கப்படாது. மேலும், இதை மற்ற கணக்கிற்கு மாற்றவும் முடியாது.
இந்தத் திட்டம் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட NHAI சில தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. குறிப்பாக, இந்தத் திட்டம் NHAI ஆல் கட்டப்பட்டு அல்லது பராமரிக்கப்படும் கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் நிலையங்கள், தாபாக்கள் அல்லது தனியார் வசதிகளில் உள்ள கழிவறைகள் இதில் சேராது. மேலும், ஒரு வாகனப் பதிவு எண்ணுக்கு (VRN) திட்டத்தின் மொத்தக் காலத்திலும் ஒரே ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும்.
ஒரே நாளில் பலர் ஒரு கழிவறையைப் புகாரளித்தாலும், ஒரு கழிவறைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும். ஒரே நாளில் பல புகார்கள் வந்தால், முதலில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், சமர்ப்பிக்கப்படும் படங்கள் அசல் படங்களாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை செயலி வழியாகவே எடுக்க வேண்டும் என்றும் NHAI அறிவுறுத்தியுள்ளது.